Pages

Tuesday, October 13, 2015

புத்தளம் கருப்பு தரவைவிவகாரமும் அதனை கையாளும்போது பேண வேண்டிய ஒழுங்குகளும்




கடந்த புதன் கிழமை (07.10.2015)சிறுவர் துஷ்பியோக சம்பமொன்று அரங்கேறியுள்ளது என்ற செய்தி புத்தளம் முழுதும் காராசாரமாக விவாதிக்கப்படும்  பேசு பொருளாக மாறியுள்ளதை புத்தளம் மக்கள் அனைவரும் நன்கு அறிவர். இந்த செய்தியை சில ஊடகங்களும் இணையதளங்களும் பத்திரிகைகளும் இதன் உண்மைத்தன்மையை சம்மத்தப்பட்ட இரு தரப்பிடமும் தீர விசாரிக்காது இதில் ஒரு தரப்பை மாத்திரம் மேலோட்டமாக விசாரித்து விட்டு வெளியிடுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.  ஆதலால் இதன் உண்மைத்தன்மையையும்  இவ்வாறான விவகாரங்களை கையாளும்போது பேண வேண்டிய ஒழுங்குகளையும் தொட்டுக்காட்ட முனைகின்றேன்.

நாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உறுதியாக நம்பிக்கை கொண்டு அல்குர்ஆனையும் சுன்னாவையும் வாழ்வின் வழிகாட்டியாக ஏற்று வாழும் முஸ்லிம்கள்  என்ற வகையில் இவ்வாறான செய்திகளை கேள்விப்படும்போது அவற்றை பண்பாடாக அணுகும் முறையை அல்குர்ஆனும் சுன்னாவும் மிக அழகுற காட்டித்தந்துள்ளன.
இந்த வழிகாட்டலை விட்டு விட்டு தாம் செவிமடுத்ததையெல்லாம் சந்திக்குச் சந்தி நின்று எவ்வித அடிப்படையோ ஆதாரமோ இன்றி பேசுகின்ற எழுதுகின்ற செய்திகளை தீரவிசாரித்து உறுதிப்படுத்தாது வெளியிடுகின்ற தரம் கெட்ட பண்பாட்டையும் நடைமுறையையும் கண்டிப்பாக முற்றாக கைவிட வேண்டும். இதற்கு மாறாக அறிவுபூர்வமாகவும் ஆதாரத்துடனும் தரவுகளுடனும் அணுகுகின்ற கலாசாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இந்த அடிப்படையில் இங்கு சில விடயங்களை முன்வைக்கின்றேன்.  
புத்தளம் நகரிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட  6 வயது சிறுமியை இரு வருடங்களாக நேசரியிற்கும் ஒரு வருடத்திற்கும் மேலாக பாடசாலைக்கும் வழமையாக குற்றம் சுமத்தப்பட்ட நபர் முச்சக்கர வண்டியில் நேசரியிற்கும், வீட்டுக்கும், பாடசாலைக்கும் ஏற்றிச் சென்றிருக்கின்றார். இந்த நிலையில் குறித்த சிறுமி தொடராக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாக கடந்த புதன்கிழமை இவ் ஆட்டோ ஓட்டுனருக்கு எதிராக முறைப்பாடு பொ​லிசில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு  சந்தேச நபர் பொலீசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். இவைகள் அனைத்தும் யாவரும் அறிந்த உண்மைகள்.
இங்கு கண்டிப்பாக பேண வேண்டிய ஒழுங்குகளில் ஒன்றுதான் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயரை ஊடகங்களுக்கு வழங்குவதை முற்றாக தவிர்த்து சிறுமியின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அவளின் நற்பெயரையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதும், குற்றவாளி எவராயினும் சரி சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்கப்படுவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வதும் பாதிக்கப்பட்ட குடும்பம், ஊர் மக்கள் ஆகிய  அனைவரினதும் தார்மீக கடமையாகும். அதேவேளை குறித்த சந்தேக நபர்தான் இக்குற்றச் செயலை செய்துள்ளார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணைகள் இன்னும் முடிவடையாத நிலையிலும் மருத்துவ அறிக்கைகள் வெளிவராத நிலையிலும்  குறித்த சந்தேக நபர்தான் இக்குற்றச் செயலை மேற்கொண்டார் என்பதாக பேசுவதும், எழுதுவதும்  அவருக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதும் எவ்விதத்திலும் நியாயமானதல்ல என்பது விவாதத்திற்கு இடமில்லாத விடயம்.
சந்தேக நபரை ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளி என்று உறுதியாகும் வரை சந்தேக நபராகவே பார்க்க வேண்டும். அவரை குற்றவாளி போன்று பார்ப்பது தவறு. விசாரணைக்குப் பின்னால் குற்றவாளி என்று உறுதியானால் உரிய தண்டனை  கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். நாம் ஆதாரங்களின் அடிப்படையிலும் அறிவுபூர்வமாகவும் இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு இதற்கான  முடிவுகளை எடுப்போமாயின் நிச்சயம் அது பிழையான முடிவுக்கே இட்டுச்செல்லும். இவ்வாறான விவகாரம் சாட்சிகளினதும் ஆதாரங்களினடிப்படையிலும் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் சிறுமியின் தரப்பு  குறித்த சந்தேக நபரை புத்தளம் பெரிய  பள்ளிவாயில், புத்தளம் ஜம்இயதுல்உலமா ஆகியவற்றின் ஊடாக அணுகி தீர விசாரித்துவிட்டு குறித்த நபர்தான் குற்றவாளி என்று  உறுதியான பின் அடுத்த கட்டமாக பொலிசையும் நீதிமன்றத்தையும் நாடியிருந்தால் மிகவும் சிறப்பானதாக இருந்திருக்கும்.
அத்துடன் இந்த விவகாரத்தை வைத்து புத்தளத்திலுள்ள புத்திஜீவிகளும் ஆலிம்களும் சமூகத்தலைவர்களும் நடுநிலை தவறி விமர்சிக்கப்படுவதும் இதில் குளிர்காய முனைவதும் சுயநலன்களுக்காக தங்களது கோபத்தையும் குரோதத்தையும்தீர்த்துக்கொள்ள முனைவதையும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.

எமது சமூகத்தில் அவ்வப்போது வருகின்ற சமூக தீமைகளுக்கு  எதிராக மாத்திரம் எமது போராட்டத்தை வரையறுத்துக்கொள்ளாது  சமூகத்திலும் நாட்டிலும் பரவியுள்ள சிறுவர் துஷ்பிரயோகம், போதைவஸ்து பாவனை, விபச்சாரம், காதல் போன்ற அனைத்து விதமான சமூகத்தீமைகளையும் இல்லாதொழிப்பதற்காகவும் நன்மைகளை வாழச் செய்வதற்காகவும் தொடராக போராடுவதும் இந்த சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்பதும் ஒவ்வொரு முஸ்லிமினதும் சன்மார்க்க கடமையாகும். நாம் அனைவரும் ஓரணியாக நின்று  சமூகத்திலிருந்து இத்தீமைகளை முற்றாக இல்லாதொழித்து நல்லதொரு முன்மாதிரியை நாம் அனைவரும் இந்த நாட்டுக்கு வழங்குவோம்.– இன்ஷா அல்லாஹ்.

அபூ – அஸ்மா

No comments:

Post a Comment