Pages

Friday, April 5, 2013

சிங்கள மக்களுடன் ஒரு சில நிமிடங்கள் - ஹஜ்ஜுல் அக்பர்




உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
April, 2013


சிங்கள பௌத்த மக்களே..!

உங்களனைவரையும் விளித்துப் பேசுவதற்காக முதலில் மன்னிப்புக் கேட்கிறேன். நீங்கள் அனைவரும் முஸ்லிம்களது பார்வையில் விமர்சனத்துக்குரியவர்களல்லர். எனினும், உங்களில் சிறு தொகையினர் கண்ணியமிக்க பிக்குமார்களின் தலைமையில் முஸ்லிம் விரோத செயல்பாட்டை மிக அண்மையில் துவங்கியிருக்கிறார்கள். அவர்கள் பேசுகின்ற பேச்சுக்களைப் பார்த்தால் முஸ்லிம்கள் மீது அவர்களுக்கு உண்மையான வெறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோவொரு நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக இல்லாத வெறுப்பையும் குரோதத்தையும் அவர்கள் வலிந்து எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்றே தெரிகிறது. அந்த வெறுப்பையும் குரோதத்தையும் சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அவர்கள் வலிந்து திணிக்க முற்படுகிறார்கள். முஸ்லிம்களோடு சகவாசமில்லாத, முஸ்லிம்கள் பற்றிய உண்மைகளை அறியாத பலர் இந்த வெறுப்பையும்
குரோதத்தையும் காட்டுத்தீ போல தங்களுக்குள் பரவச் செய்கிறார்கள். அதனால்தான் உங்களையும் விளித்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

சிங்கள மக்களே!

நீங்கள் அண்ணன் என்று சொன்னார்கள் நாங்கள் தம்பிமார் என்று நினைத்தோம். நீங்கள் பெண் தந்ததாகச் சொன்னார்கள் நாங்கள் பிள்ளைகள் என்ற உறவு கொண்டாடினோம். நீங்கள் “இது சிங்கள நாடு” என்று சொன்னீர்கள் நாங்கள் சிங்கள நாட்டைப் பிரித்து எங்களுக்கும் பங்கு தாருங்கள் என்று ஒருபோதும் கேட்கவில்லை. எங்களையும் உங்களையும் சில மத அனுஷ்டானங்களும் வழிபாடுகளும் மொழியும் தவிர வேறு எதுவும் வேறுபடுத்தவில்லை.
நிலைமை இவ்வாறிருக்க, திடீரென உங்களில் சிலர் எழுந்து வருகிறார்கள், முஸ்லிம்களை ஒட்டு மொத்தமாகக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார்கள். முஸ்லிம்களைத் தேசத் துரோகிகள் போலவும் தீண்டத்தகாதவர் போலவும் ஒதுக்குகிறார்கள் சாடுகிறார்கள், சம்பிரதாய முஸ்லிம்கள் நல்லவர்கள் என்று இடையிடையே அவர்கள் கூறிக் கொண்டாலும் முஸ்லிம்களை ஏசும்போதும் அவர்கள் மீதான வெறுப்பை விதைக்கும்போதும் முஸ்லிம் என்ற பெயரில் வாழும் எவரையும் அவர்கள் விட்டு வைத்ததாகத் தெரியவில்லை.

சிங்கள மக்களே!

முஸ்லிம்கள் உங்களோடு ஒன்றாக இருந்த கதையை நான் சொல்ல வேண்டியதில்லை. அதனை சொல்வதற்கு பல ஆயிரம் சிங்களவர்களே இருக்கிறார்கள்.

பிரித்தாளும் தந்திரமுள்ள ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும்போது முஸ்லிம் சமூகத்தை சிங்கள சமூகத்திலிருந்து பிரித்து வைக்க முயன்றார்கள். அப்போதிருந்த முஸ்லிம் தலைவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. வடக்கிலிருந்த 80 ஆயிரம் முஸ்லிம்களை இரண்டு மணித்தியாலங்களில் உடுத்திய ஆடையோடு LTTE அமைப்பினர் வெளியேற்றினார்கள். முஸ்லிம்கள் LTTE யோடு இணைந்து பிரிவினைக் கோரிக்கைகளை ஆதரித்திருந்தால் அவர்களுக்கு இந்த நிர்க்கதி ஏற்பட்டிருக்காது என்பதெல்லாம் சிங்கள மக்களுக்குத் தெரியாததல்ல.

நான் நினைக்கிறேன், முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒன்றாக நன்றாக இருந்த கதை முஸ்லிம் விரோதப் போக்கை முன்னெடுப்பவர்களுக்குப் பிடிக்காது. அவர்களுக்குப் பகையோடு இருந்த கதைகள்தான் தேவைப்படுகிறது. இட்டுக் கட்டியேனும் அவ்வாறான கதைகளைப் பேசினால்தான் அவர்களது வாய்கள் இனிக்கும் போலும்.

சிங்கள மக்களே!

உங்களில் சிலர் ஏன் இப்படி மாறினார்களள் என்பது எங்களுக்கு வியப்பாகத்தானிருக்கிறது. இதன் பின்னணி அப்படி.. இப்படி... எனப் பலர் பல கதைகளைக் கூறுகிறார்கள். நாங்கள் நல்லெண்ணம் வைத்து ஒரு நல்ல பின்னணி இருக்கலாம் என்று வைத்துக் கொள்வோம், முஸ்லிம் விரோதப் போக்கை முன்னெடுப்பவர்கள் கூறும் காரணத்தையே இதன் பின்னணி என்று ஏற்றுக் கொள்வோம்.

அதாவது, சிங்கள மக்கள் இந்த நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களது நலன்களைக் கவனிக்க யாருமில்லை அவர்களைப் பாதுகாக்க வேண்டும் புத்த தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் அதுதான் பொது பள சேனா போன்ற அமைப்புகள் உருவாகக் காரணம்.

ஒரு சமூகம் தன்னையும் தனது தர்மத்தையும் பாதுகாப்பதற்கு உலகில் யார்தான் ஆட்சேபணை தெரிவிக்க முடியும். இந்த நல்ல வேலையைச் செய்வதற்கு இன்றல்ல, எப்போதோ சிங்கள சமூகம் தயாராகியிருக்கலாமே! சரி, இன்றாவது அவர்கள் இந்தப் பணியை செய்ய முன்வந்திருக்கிறார்கள். அதற்கு எமது வாழ்த்துக்கள்!

சிங்கள மக்களே!

இந்த நல்ல வேலையைச் செய்வதற்கு ஏன் ஒரு கெட்ட வேலையைத் துவங்க வேண்டும்? சிங்கள மக்களையும் புத்த தர்மத்தையும் பாதுகாப்பதற்கு முஸ்லிம்களை ஏன் வம்புக்கு இழுக்க வேண்டும்? முஸ்லிம்கள் சிங்கள மக்களுக்கெதிராகவோ, புத்த தர்மத்திற்கெதிராகவோ இந்த நாட்டில் போர்க்கொடி தூக்கவில்லை. ஒரு சில சிங்களவர்கள் இண்டர்நெட்டைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் செய்திருக்கின்ற கீழ்த்தரமான, மனிதப் பண்பாடே இல்லாத விஷமப் பிரசாரத்தைப் போன்று ஆயிரத்தில் ஒரு பங்கேனும் முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கெதிராகவோ புத்த தர்மத்திற்கெதிராகவோ பிரசாரம் செய்யவில்லை.

முஸ்லிம் விரோதப் போக்கை முன்னெடுப்பவர்களுக்கு இந்த உண்மை மறைவானதல்ல. அவர்கள் சம்பிரதாய முஸ்லிம்கள் என ஒரு சாராரைக் கண்டுபிடித்து அவர்களை நல்லவர்கள் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வது தங்களது மனச்சாட்சியை ஆறுதல்படுத்திக் கொள்வதற்கே. எனினும், எதிர்க்கும்போது அந்த சம்பிரதாய முஸ்லிம்கள் யாரென்பது இவர்களுக்கு விளங்கப் போவதில்லை.

சிங்கள மக்களே!

உங்களில் சிலர் இந்தப் போக்கைத் தொடருவதற்கு நீங்கள் அனுமதித்தால் நீங்கள் ஒரு மானசிகத் தோல்விக்கு ஆளாகி விடுவீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
நல்லவர்களை எதிர்த்துப் போராடுவது ஒரு மானுசீகத் தோல்வி, கெட்டவர்களோடு கை கோர்த்துச் செல்வதும் ஒரு மானசிகத் தோல்வி. இந்தத் தோல்வி ஆயுத ரீதியாகத் தோல்வியடைவதைவிட ஆபத்தானது.

LTTE பயங்கரவாதத்தை எதிர்த்து நீங்கள் வெற்றி கண்டீர்கள். அது ஆயுத ரீதியாகவும் மானசிகமாகவும் உங்களது பலத்தைக் கூட்டியது. உங்களோடு எப்போதும் ஒன்றாக, நன்றாக இருந்த முஸ்லிம்களை நீங்கள் எதிர்க்க முற்பட்டால் சிலபோது உங்களது அரச, நிர்வாக, ஆயுத, பண பலத்தால் நீங்கள் அவர்களை சீரழிக்கலாம். ஆனால், நீங்கள் பயங்கரமான ஒரு மானசிகத் தோல்வியால் பீடிக்கப்படுவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்.

அது மட்டுமல்ல, உங்களது எதிர்ப்புக்களைத் தாங்க முடியாத முஸ்லிம் வாலிபர்களை, நேற்று LTTE ஐப் போஷித்தவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் போஷிக்க எத்தனிக்கலாம். அப்போது நாட்டுக்கு மற்றுமொரு தலைவலியைத் தேடிக்கொண்ட பரிதாபம்தான் மிஞ்சும். முஸ்லிம் தலைவர்கள் நாட்டுக்கு அந்தத் தலைவலியைக் கொடுக்க ஒருபோதும் இடம் தரமாட்டார்கள். எனினும், ஏகாதிபத்திய சக்திகளின் நரித் தந்திரங்கள் சிலபோது அவர்களை மிகைத்துவிடலாம்.

சிங்கள மக்களே!

இத்தகைய கேடுகளை நோக்கி சிங்கள சமூகத்தை இட்டுச் செல்வதா? சிங்கள சமூகத்தைப் பாதுகாக்கும் வழி நிச்சயம் இதுவல்ல. நீங்கள் ஏன் பிஞ்சு உள்ளங்களில் குரோதத்தையும் வெறுப்பையும் வளர்க்கிறீர்கள்? அப்பட்டமாகப் பொய் சொல்கிறீர்கள் வரலாறுகளைத் திரிபுபடுத்துகிறீர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய நடைமுறைகளையும் மனிதப் பண்பாடுகளுக்கப்பால் சென்று அசிங்கமான முறைகளில் இழிவுபடுத்துகிறீர்கள் முஸ்லிம்களையும் அவர்கள் புனிதமாகக் கருதுகின்ற முஹம்மத் நபி மற்றும் அல்குர்ஆன், அதுபோல் மக்கா நகரம் போன்ற இன்னோரன்ன புனிதமானவற்றை சமூக ஊடகங்களில் கீழ்த்தரமாக சித்திரிக்கின்றீர்கள். மொத்தத்தில், ஒரு சாதாரண மனிதனது இயல்பும்கூட வெறுக்கின்ற அளவு பகிரங்கமாக எதிர்ப் பிரசாரம் செய்கிறீர்கள்.

முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டாம் அவர்கள் உடலுக்குத் தீங்கு பயக்கின்றவற்றை விற்பனை செய்கிறார்கள். அவர்களோடு உறவுகளை வைத்துக் கொள்ள வேண்டாம் அவர்கள் சதிமோசக்காரர்கள். உங்களுக்கெதிராக நாடளாவிய ரீதியில் கலகமொன்றை உருவாக்கத் திட்டமிடுகிறார்கள்...

இவ்வாறு முஸ்லிம்கள் கனவிலும் நினைத்திராதவற்றை எல்லாம் அவதூறாக இட்டுக் கட்டி பொய்ப் பிரசாரம் செய்கின்ற சிங்கள பௌத்த மத குருக்களே! (அனைவருமல்ல) நீங்கள் இந்த இழிவான வழிமுறைகளினூடாகவே பௌத்தத்தையும் பௌத்த மக்களையும் பாதுகாக்க முயற்சிக்கிறீர்கள்.

நீங்கள் பிஞசு உள்ளங்களை மாசுபடுத்துகிறீர்கள். நெறிபிறழச் செய்கிறீர்கள். அந்த உள்ளங்களின் இயல்பான, சீரான வளர்ச்சியைத் தடைசெய்கிறீர்கள். நாளை நீங்கள் எதிர்பார்ப்பதுபோல உங்களது குறுகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அவர்கள் முஸ்லிம் விரோதப் போக்கை முன்னெடுக்கலாம். ஆனால் அவர்களது உள்ளங்களில் நீங்கள் விதைத்த வெறி, குரோதம், பகை என்பன இல்லாமல் போகாது. அவர்கள் அவற்றை தங்களது உள்ளங்களிலிருந்து இறக்கி வைத்து விட்டு வாழ முடியாது. அவர்கள் தமது உள்ளங்களில் சுமந்த பகை, வெறுப்பு, குரோதம், இனவெறி போன்ற நச்சுக் கிருமிகள் நிச்சயம் அவர்களுக்கு நல்வாழ்வைத் தரமாட்டாது. அவர்களது அடுத்த சந்ததிகளையும் அது பாதிக்கவே செய்யும். அப்போது உலகில் சீரிய நெறிமுறைகளைப் பின்பற்ற முடியாத மன அழுத்தங்களும் பாதிப்புக்களும் நிறைந்த ஒரு சிங்கள சமூகத்தையே நீங்கள் உருவாக்கியிருப்பீர்கள். இதுவா நீங்கள் சிங்கள சமூகத்தையும் புத்த தர்மத்தையும் பாதுகாப்பதற்காகச் செய்யும் சேவை?

சிங்கள சமூகத்தையும் புத்த தர்மத்தையும் நீங்கள் பாதுகாக்க நினைத்தால் அதற்கு நேரிய சீரிய வழிகள் ஏராளமிருக்கின்றன. அந்த வழிகளை அறிந்து கொள்ளும் அளவு நேரிய சிந்தனையை இழந்த நிலையில் சிங்கள பௌத்த சமூகம் இருக்க மாட்டாது என்று நினைக்கிறேன்.

சிங்கள பௌத்த மக்கள் உலகில் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு சமூகம் என்பதை அந்த சமூகத்தின் மீது உண்மையான அக்கறையுடன் நாமும் கூறுகிறோம். அதற்கான முதற் காரணம் சிங்கள பௌத்த சமூகம் இயல்பானது அந்நியோன்யமானது மனிதநேயமிக்கது இயல்பில் நல்ல சுபாவங்களைக் கொண்டது. உலகில் எந்தப் பகுதியில் இலங்கையின் சிங்கள மக்கள் வாழ்ந்தாலும் அவர்களிடம் காணப்படும் இந்த சிறப்பம்சங்கள் மாறுவதில்லை.

மற்றொரு காரணம் சிங்கள பௌத்த சமூகம் உண்மையில் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சமூகமாகும். புலிகளுக்கெதிராக இராணுவம் வெற்றியை ஈட்டிக் கொடுத்தாலும் சிங்கள சமூகம் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பாதிப்புக்களிலிருந்து விடுபடவில்லை. சிங்கள சமூகத்தின் உண்மையான பாதிப்புக்கள் ஏராளம்! அந்தப் பாதிப்புகளிலிருந்து அந்த சமூகத்தை மீட்டெடுப்பவர்கள்தாம் உண்மையில் சிங்கள சமூகத்தின் காவலர்கள்.

மது பாவனை, பல்வேறு சீர்கேடுகளாலும் வாழ்க்கைச் சுமைகளாலும் ஏற்படும் விரக்கி மனப்பான்மை, அதன் விளைவாக நிகழும் தற்கொலைகள், கோஷ்டி மோதல்களும் அவற்றின் விளைவாக நிகழும் கொலைகளும் பழிவாங்கல்களும், பொருளாதாரச் சுமைகள் காரணமாக கணவனோ மனைவியோ வெளிநாடு செல்லும்போது வீட்டுச் சூழலில் ஏற்படும் முறைகேடான பாதிப்புக்கள், கல்வி தொழில் மற்றும் இன்னோரன்ன காரணங்களால் தாமதமாகும் திருமணங்கள், அதேவேளை ஆண்களும் பெண்களும் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், இவற்றின் காரணமாக குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் அக்கறையின்மை, இவை அனைத்திற்கும் மேலாக நடை உடை பாவனைகள் அனைத்திலும் பரவி வரும் மேற்கத்தேய கலாசார மோகம். அதனால் சிதைவடையும் சிங்களக் கலாசாரம்...

இவ்வாறு சிங்கள சமூகத்திலுள்ள பிரச்சினைகளையும் பாதிப்புக்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தகைய பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைக்க வேண்டிய தலைவர்களோ அதிகாரப் போட்டியில் கவனம் செலுத்துளமவு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதில்லை. சிலபோது நாட்டின் கடன் பளுவையும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அரச நிறுவனங்களின் இழப்புக்களையும் மக்கள் தலையிலேயே சுமத்திவிடுகிறார்கள் இந்தத் தலைவர்கள். எனவே, தீர்க்க முடியாத வரிச்சுமை, விலையேற்றம் என்பன மக்களை கசக்கிப் பிழிகின்றன. 

இதுபோன்ற பாதிப்புக்கள் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்கள் அனைத்திலும் காணப்படுகின்றன. ஏற்கனவே யுத்தத்தாலும் எண்ணற்ற பாதிப்புக்களை மூன்று சமூகங்களும் சந்தித்திருக்கின்றன. 

இத்தகைய பாதிப்புக்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியாத தலைவர்கள் மக்கள் அதிருப்தியடையாதிருக்கவும் அவர்களது கவனங்களை வேறு திசையில் திருப்பவும் இனங்களிடையே மோதல்கள் ஏற்படுவதை விட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் போலும். உண்மையில் வெளிப்படையாகத் தீமை செய்பவர்கள் மட்டும் தீயவர்களல்லர். சக்தியிருந்தும் அவர்களைத் தட்டிக் கேட்காதவர்கள் தடுத்து நிறுத்தாதவர்களும் தீயவர்களே. காரணம், அவர்கள் ஒன்றில் மறைமுகமாக தீமைக்கு ஆதரவளிப்பவர்களாக இருக்கிறார்கள் அல்லது நடைபெறும் தீமைகளுக்கு மௌன அங்கீகாரம் வழங்குபவர்களாக இருக்கிறார்கள்.

 சிங்கள மக்களே! 

வெறுப்பு, குரோதம், பகை, துவேஷம், இனவாதம் என்பவை யாவும் உள்ளங்களில் மூட்டப்படும் நெருப்பாகும். அன்பு, மனிதநேயம், சகோதரத்துவம் போன்றவை மனித உள்ளங்களை நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஒளடதங்களாகும். சிங்கள மக்களின் உள்ளங்களில் நெருப்பை மூட்டாதீர்கள். அந்த நெருப்பு மற்றவர்களைவிட நெருப்பை சுமந்த உள்ளங்களையே சுட்டெரிக்கும். இன்று நீங்கள் வேண்டுமானால் முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் ஒரு சிறிய பாதிப்பை ஏற்படுத்தலாம். பொருளாதாரத்தில் ஒரு முயற்சி தோற்றுப் போகும்போது அவர்கள் மற்றொரு வழியைத் தேடிக் கொள்வார்கள். 

1983 கறுப்பு ஜுலைக் கலவரத்தில் தமிழர்களின் பொருளாதாரத்துக்கு வேட்டு வைக்கப்பட்டது. விளைவு என்ன? நாட்டுக்கு ஒரு பக்கம் அபகீர்த்தி. தமிழர்கள் தமது சொந்த மண்ணை வெறுத்து நாட்டை விட்டும் வெளியேறினார்கள். அவர்கள் பொருளாதாரத்தில் வீழ்ந்து போகவில்லை. இன்று உலக சக்திகளோடு நெருக்கமாக இருந்து இலங்கைக்கு எதிராக செயல்படும் பலமான டயஸ்போராவாக மாறியிருக்கிறார்கள். அது மட்டுமல்ல, முப்பது வருடங்கள் நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் சென்ற பயங்கரமான யுத்தத்துக்கு பின்புலம் கொடுத்து உதவிபுரிந்தார்கள். இலங்கை மண் இத்தகைய சிறுபிள்ளைத்தனங்களால் கண்டவை அனைத்தும் அவலங்களே.

ஆக... வெறுப்பு, குரோதம், பகை, துவேஷம், இனவாதம் போன்ற நெருப்புக்கள் ஒருபோதும் நன்மைகளின் பக்கம் நாட்டை இட்டுச் செல்வதில்லை. நிதானமாக சிந்தியுங்கள்.

முஸ்லிம்கள் தங்களுக்கெதிராக நடக்கும் துர்ப் பிரசாரங்களைப் பார்த்து சமூக பாணியில் சிங்கள மக்களுக்கெதிராக செயல்படும் நிலை உருவாக வேண்டும் என்பதுதான் முஸ்லிம் விரோதப் போக்கை முன்னெடுப்பவர்களது எதிர்பார்ப்பாகும். எனினும், மதத்தின் பெயரால் துவேஷம் வளர்ந்து முஸ்லிம்களின் உள்ளங்களில் இனவாத நெருப்பை மூட்டி அவர்களை சீரழிக்க முஸ்லிம் மதத் தலைவர்கள் தயாரில்லை. மேலும் மேலும் அன்பையும் மனித நேயத்தையுமே முஸ்லிம் மதத் தலைவர்கள் போதிக்கிறார்கள். அவர்களது போதனைகளுக்கு செவிசாய்த்து முஸ்லிம் சமூகம் பொறுமையோடும் நற்குணங்களோடும் நடந்து கொள்கிறது.

முஸ்லிம்கள் இந்த வகையில் ஒரு பேருண்மையை உணர்ந்திருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் வாழ்வும் சாவும் அந்த சமூகத்தின் கோட்பாடுகளதும் பண்பாடுகளதும் உன்னதமான நடைமுறைகளதும் வாழ்வும் சாவுமே. ஒரு சமூகம் தனது உயர்ந்த கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் தனது அடுத்த பரம்பரைக்குக் கொடுக்காமல் இடைக்கால நோக்கங்களுக்காக பகையையும் வெறுப்பையும் குரோதத்தையும் இனவாதத்தையும் வளர்த்துவிட்டுச் சென்றால் தனது பரம்பரையை அந்த சமூகம் அழித்து விடுகின்றது. 

சிங்கள மக்களே!

உங்களது இனம் இத்தகைய ஒரு முடிவை நோக்கி இட்டுச் செல்லப்படுகிறதா என்று சிந்தியுங்கள். இனத்தைப் பாதுகாப்பதாகக் கூறி அதனை அழிவுப் பாதையில் இட்டுச் செல்வது ஒரு சதியாகும். சிங்கள சமூத்தைப் பாதுகாப்பதற்கும் அதனை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கும் வழி தேடுவதாயின் ஜப்பானைப் பாருங்கள் துருக்கியைப் படியுங்கள். இந்தியாவின் பாரதீய ஜனதாவையும் சிவ சேனாவையும் பார்க்காதீர்கள்.

சிங்கள மக்களே!

உங்களுக்கு எப்போதும் நாம் நல்லவர்களாகவே இருப்போம். நீங்கள் எங்களோடு எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த முடிவுகளை சித்திரிக்கும் ஒரு சம்பவத்தோடு இந்த விளக்கத்தை நிறைவு செய்கிறேன்.

முஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கடையின் சொந்தக்காரர் அந்த விலைக்குத் தரமுடியாது என்று கூற, வாங்கிய பொருட்கள் அனைத்தையும் வைத்துவிட்டு “ஹலால்” பற்றியும் ஏதோ கூறிவிட்டுக் கோபமாக வெளியேறிச் சென்றுள்ளார். வெளியே சென்ற அவசரத்தில் அவரது பணப்பை இருந்த ஒரு பொதியை அவர் கையில் எடுத்துச் செல்ல மறந்து விட்டார்.

பல மணித்தியாலங்களின் பின் திரும்பி வந்த அப்பெண் தான் விட்டுச் சென்ற பொதியை விசாரித்துள்ளார். அதில் 48 ஆயிரம் ரூபாய் பணம் இருந்திருக்கிறது. முஸ்லிம் வியாபாரி அந்தப் பொதி பற்றி எனக்குத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் பதில் கூறியிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக, அந்தப் பணத்தை அப்பெண்ணுக்கு திருப்பிக் கொடுத்த வியாபாரி சொன்ன செய்தி இதுதான்.

“நீங்கள் எனது வியாபாரப் பொருளின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தினீர்கள். அதில் கிடைக்கும் இலாபம்தான் எனக்கு “ஹலால்” (ஆகுமாக்கப்பட்டது). இந்த 48 ஆயிரம் உங்களுடையது அது எனக்கு “ஹராம்” (தடை செய்யப்பட்டுள்ளது). இஸ்லாத்தின் இந்த உன்னதமான கொள்கையை நான் பினபற்றுவதால்தான் உங்களது பணத்தைக் கிடைக்க உங்களுக்கு நன்மை செய்கிறேன். நீங்கள் எனது கடையில் பொருள் வாங்காவிட்டால் அது உங்களது விருப்பம். அதற்காக உங்களது பணத்தை நான் அனுபவிக்க முடியாது. இதோ உங்களது பணம் பெற்றுக் கொள்ளுங்கள்.”

சிங்கள மக்களே! 

முஸ்லிம்களது “ஹலாலை” உங்கள் மீது திணிக்க மாட்டோம். ஹலால் மட்டுமல்ல, எதையும் திணிக்க மாட்டோம். ஆனால் இந்த ஹலால் அநீதிகளிலிருந்து நிச்சயம் உங்களைப் பாதுகாக்கும். உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாது. எனினும், நீங்கள் போதிக்கும் பொய்களும் அவதூறுகளும் பகையும் வெறுப்பும் இனவாதமும் உங்களது அநீதிகளிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்குமா?

உங்களுக்கு எங்களாலும் எங்களுக்கு உங்களாலும் நல்வாழ்வு கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

No comments:

Post a Comment