Pages

Monday, March 18, 2013

யுத்த காலத்திலும் ஹிஜாப் அணிந்தோம்



யுத்த காலத்திலும் ஹிஜாப் அணிந்தோம்
 
Published on Fri  Mar - 2013

முப்பது வருடங்களாக இரவும் பகலும் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச்சூடு, மரணம், இரத்தம், காயம் என்று பயந்து பயந்து வாழ்ந்த இலங்கை மக்கள் கடைசியாக யுத்தம் முடிவடைந்து சற்று நிம்மதியாக மூச்சு விடத் தொடங்கிய ஒரு சகாப்தத்துக்குள்ளேயே மீண்டும் மக்களிடையே கலவரத்தையும் பயத்தையும் உருவாக்கக்கூடிய பிரச்சினைகளை உருவாகுவது மிகவும் கவலைக்குரியது. அதுவும் எவர் நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் காக்க வேண்டும் எவர் நட்பையும் நல்லெண்ணத்தையும் உருவாக்க வேண்டுமோ அவர்களே புத்தமத குருமார்களே இவற்றை ஒழிப்பதற்கான அடிக்கல்லை நாட்டுவது மிகவும் விசனத்துக்குரியதுதான்.

புத்த மதம் அமைதி சார்ந்தது. அடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆசை அபிலாஷைகளை விட்டொழித்து தான், தனக்கு, தனது என்ற சுய லாபங்களைக் கடந்து மனதை ஒருமைப்படுத்தி இவ்வுலகிலும் மறுவுலகிலும் நிம்மதி பெறும் ஒரு வாழ்க்கை நெறி. வாழு, வாழவிடு எனும் பெரும் புத்த கோட்பாடு மனிதன் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையாய் ஒருமித்து வாழ்வதற்கு வழிகாட்டும் நல்லதொரு வாழ்க்கை முறை.
 
இதற்கு முற்றிலும் மாறாக நம்மிடையே வாழும் சிறுபான்மை மக்களது அன்றாட வாழ்க்கைமுறை, ஆடையணி நெறிகள், உணவு சார் சட்டங்கள் இவற்றைக் குறிவைத்து இப்படித்தான் வாழ வேண்டும், இவ்வாறு தான் நடக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது புத்த தர்மத்துக்கே மாறானது. இன்று புத்த பெருமானார் உயிருடனிருந்தால் இத்தகைய கோட்பாடுகளை ஆதரிப்பாரா என்பது எனது மதம் புத்த மதம் எனக் கூறிக் கொள்ளும் ஒவ்வொரு பிரஜையும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விடயம்.

ஒரு நாட்டின் கலாச்சாரம் என்பது அந்த நாட்டு மக்களின் நடையுடை பாவனைகளில் தங்கியுள்ளது. விசேடமாக பெண்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்பது ஒரு கன்னிப் பெண் என்ற நிலையில் மட்டுமல்ல, அவள் ஒரு சகோதரி, அவள் ஒரு மனைவி, அவள் ஒரு தாய், அவள் ஒரு நாட்டுப் பிரஜை என்ற எல்லாக் கோனங்களிலும் இருந்து அவதானிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம். எங்கு பெண்கள் அடக்கமின்றி அலங்கோலமாக அரை நிர்வாணமாகத் திரியத் தொடங்குகின்றார்களோ அங்கு அனாச்சாரமும் அழிவும் தொடங்கி விடும் என்பதற்கு இன்றைய மேலைநாட்டு நிலை ஒரு அப்பட்டமான முன்மாதிரி.

நிமிடமொன்றுக்குக் குறைந்தது மூன்று பெண்கள் கற்பழிக்கப்படுகின்றார்கள் என்று இன்று 21ம் நுõற்றாண்டில் முன்னிலையில் நிற்கின்றோம் என்று மார் தட்டிக் கொள்ளும் அமெரிக்கா கூற வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்துப் பார்த்தால் அங்குள்ள பெண்கள் ஆடை சம்பந்தமாக அவர்களது நடத்தை சம்பந்தமாக அடிப்படை மனித இயல்புகளான வெட்கம், மானம், ரோஷம் சம்பந்தமாக எடுத்துக்கொண்ட தவறான நடைமுறைகளே என்பதை சமூகவியலாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இதற்கு சமுதாயத்தில் குடி, சூது இவை துணை போகின்றன என்பதும் நாம் இன்று கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு விடயமாகும்.


இலங்கை வாழ் மக்களிடையே மேலைத்தேசத்து பாதிப்பு மெது மெதுவே ஊடுருவினாலும் ஆயிரங் காலமாக கட்டி எழுப்பப்பட்ட அடிப்படை மான, ரோஷ விடயங்கள் இழக்கப்படவில்லை என்பது நாம் மார் தட்டிக் கொள்ளக்கூடிய நல்லதொரு விடயம். உலகின் மிக நல்லதொரு நடையுடைபாவனை வாழ்க்கை முறையை கொண்ட நாடாக இன்றுவரை நாம் விளங்கி வந்தோம். எத்தனை தான் பணக்காரராக மேலைநாட்டு வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவராக இருப்பினும் நமது பெண்கள் அவர்கள் எந்த மதத்தினராய் இருந்தாலும் அரை, குறை ஆடையுடன் அல்லது நீச்சலுடையுடன் ஒரு பொது இடத்திலோ அல்லது களியாட்ட இடங்களிலோ வெளிவருவதில்லை. அப்படி வருவது அவர்களுக்கு இழுக்கை மட்டுமன்றி முழு சமுதாயத்தினராலும் அவர்கள் எந்த மதத்தினராயிருப்பினும் வெறுக்கப்படக்கூடிய ஒன்றாகத்தான் இதுவரை கணிக்கப்பட்டது.

இந்த வகையில் இன்றும் கற்றறிந்தோர் உயர் நிலை பிரஜைகள் போன்றோரின் கூட்டங்கள், கூடுமிடங்கள் இவற்றுக்கு வரும் பெண்கள் அவர்கள் எந்த வயதினராக இருப்பினும் அநேகமாக மரியாதையான முழு உடலை மூடியிருக்கக் கூடிய ஆடைகளையே அணிவதை நாம் பார்க்கின்றோம். வைத்தியர்கள், என்ஜினியர்கள், நீதிபதிகள் இப்படியானோர் கூடும் பொதுக் கூட்டங்களுக்கு வரும் பெண்கள் மினி ஸ்கர்ட், அல்லது கையில்லாத சட்டை அணிவதில்லை என்பது அடக்கமான ஆடை இன்றும் விரும்பப்படுகின்றது. சமுதாயத்தின் உயர் நிலையிலுள்ள பெண்கள் கௌரவிக்கப்படுகின்றார்கள் என்பதற்கு இது சான்று.

இந்தப் பின்னணியில் முஸ்லிம் பெண்கள் அணியும் மிக அடக்கமான அழகான ஆடைகளான அபாயாவைக் கொச்சைப்படுத்தி அவர்கள் உடல் தெரியும் அரைகுறை ஆடைதான் அணிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது அதுவும் உலக அபிலாஷைகளைத் துறந்து வாழும் மதகுருக்கள் அது பற்றி விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயமாகும். சொல்லப்போனால் அவர்கள் தான் பெண்கள் எந்த ஆடையை அதாவது ஆண்களின் மன இச்சைகளைத் துõண்டி விடுவதைத் தடுக்கக்கூடிய அடக்கமான ஆடையணிகளை அணியும்படி மக்களை ஊக்குவிக்கும் நற்பிரஜைகளாக இருக்க வேண்டும்.

ஒரு புறம் ஒரு பெண்ணின் உடலமைப்பை வெளிக்காட்டாத தளர்ந்த ஆடை, மறுபுறம் சமுதாயத்தில் ஏற்றதாழ்வை உருவாக்காத எவராயினும் அணியக்கூடிய ஒரே விதமான ஆடை, இன்னொருபுறம் தனது வேதத்துக்குக் கட்டுப்பட்ட பெண்களது மனப்பாங்கு இவற்றை வெளிப்படுத்தும் ஆடை இதனை எப்படி ஒருவர் வெறுக்க முடியும். எப்படி தடுக்க முடியும்.

முஸ்லிம் பெண்கள் இத்தகைய ஆடை அணிவதன் அடிப்படை இது அவர்களது வேதத்தில் மார்க்கத்தில் சமயத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான ஒரு கட்டளை என்பதால் தான். கணவரோ, மற்ற ஆண்களோ கட்டாயப்படுத்துவதால் அல்ல என்பதை ஒரு பாதையில் போகும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளக் கூடிய ஒரு விடயம்.

உண்மையில் சொல்லப்போனால் ஆண்கள் இதனை கட்டாயப்படுத்தினாலும் கூட சமுதாயத்தின் நல்லொழுக்கத்தையும் கட்டுக்கோப்பையும் நிலைநாட்டும் நல்லதொரு வழக்கமாக நாம் காண வேண்டும் தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஆகியவற்றில் காட்டப்படும் வக்கிர படங்கள், பெண்கள் சார் விடயங்கள் இவற்றால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இலங்கையின் சம்பிரதாய பழக்க வழக்கங்களை மீறி தனது மகளையே அல்லது தனது பாட்டியையே கற்பழிக்கும் நிகழ்ச்சிகள் நாளாந்தம் நடைபெறத் தொடங்கும் இக்காலகட்டத்தில் அத்தகைய வக்கிர புத்திக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய அடக்கமான நடையுடை பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்.

பெண்கள் இந்நாட்டின் பிரஜைகள் அவர்களுக்கும் மனித உரிமைகள் உண்டு. மற்றோரை அநியாயமாகப் பாதிக்காத வரை, அவர்கள் இஷ்டப்படி ஆடையணிய அவர்களுக்கு உரிமை உண்டு. இதனையிட்டு மற்றோர் விசேடமான மற்றுமோர் இனத்தினர் தலையிடும் போது அது தனி மனித உரிமையில் கைவைக்கும் விடயமாகிறது. எமது நாட்டுச் சட்டத்துக்கும் புறம்பான இப்படியான அநியாயக் கட்டுப்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் சமுதாயம் நாளை இதையும் விட பாரதுõரமான விடயங்களில் ஒருவருக்கொருவர் முரண்பாடுகளை சந்திக்க நேரிடும்.

எனவே, அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் இந்த விடயத்தை முஸ்லிம்கள் மட்டுமல்ல நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் எதிர்க்க வேண்டும். இத்தகைய தலையீடு நாளை எத்தகையதோர் குழப்ப நிலையைக் கொண்டு வரலாம் என்பது பற்றி ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று இன்னொருவருக்கு நடக்கும் அநியாயத்தைக் கண்டும் நாம் வாளாவிருப்போமேயானால் நாளை இதை விடப் பாரதுõரமான அநியாயம் நமக்கே நடக்கும் போது நமக்குப் பக்க பலமாக யாரும் வர மாட்டார்கள் என்ற உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

எங்கோ யாரோ ஒரு மனிதன் இந்த ஆடையில் வந்து வங்கியில் திருட முயன்றார் என்றால் அது அந்த வங்கியின் கவலர்கள் விட்ட தவறு. அதற்காக எல்லோரும் இந்த ஆடையைக் கைவிட வேண்டும் என்பது ஒருவர் கால்சட்டைப் பைக்குள் கைக்குண்டு வைத்திருந்தார் என்பதற்காக யாருமே காற்சட்டை அணியக் கூடாது என்று சொல்லும் கேலிக் கூத்தாகி விடும். முப்பது வருடகால யுத்தத்தின் போது கூட இந்த ஆடை ஒரு பிரச்சினையாக உருவாகவில்லை. அமைதி கிடைத்த பிறகு இதையே ஒரு பிரச்சினையாக்கி இன்னுமொரு யுத்தத்துக்கு அடிகோலுகிறோமா? அநியாயமான ஒரு எதிர்கால கலவரத்துக்கு வித்திடுகிறோமா?

நீதி, நியாயம் விரும்புகின்ற நேர்மையுள்ளம் கொண்ட ஒவ்வொரு இலங்கைப் பிரஜையும் ஆணோ பெண்ணோ எந்த மதத்தினராயினும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய இன்றைய முக்கிய பிரச்சினை இது.




No comments:

Post a Comment